

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமிக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுபரிசோதித்தபோது, சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, பள்ளிநிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார், வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட முயன்றனர். அப்போது பள்ளியில் இருந்து வெளியே வந்த ஆசிரியர்மணிகண்டனை தாக்கினர். அங்கிருந்த போலீஸார் ஆசிரியரை மீட்டு, தவளக்குப்பம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தின்போது போலீஸார், சிறுமியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுவை - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், தனியார் பள்ளியின் கண்ணாடி, மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை உடைத்து, பள்ளியை சூறையாடினர். சாலை மறியல் போராட்டம் இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது.