

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரியில் காலை, மாலை என்று இரு ஷிப்ட்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இக்கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் முதலாமாண்டு பயிலும் நெல்லையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியராக பணிபுரியும் மருதகுளம் பகுதியைச் சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
செல்போன் மூலம் அடிக்கடி பேசுவது, இரவில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து, அந்த மாணவி காவல் துறையில் புகார் அளித்தார். மாணவிக்கு பாலியல் ரீதியாக பிரைட் ஜோவட்ஸ் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாளையங்கோட்டை மகளிர் போலீஸார் அவரை இன்று கைது செய்தனர். இதனிடையே, பிரைட் ஜோவட்ஸை பணிநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை இரவு நேரத்தில் தொடர்புகொண்டு, மது அருந்த வரும்படி அழைத்த பேராசிரியர் ஜெபஸ்டின் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அதே கல்லூரியில் மீண்டும் ஒரு பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.