நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் சிக்கினர்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக தென்காசியை சேர்ந்த நபரை போலீஸார் பிடித்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, கட்டுபாட்டு அறையில் இருந்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து எழும்பூர் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சென்னை மாநகர போலீஸார் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர், பயணிகள் அமரும் நடைமேடைகள், குப்பை தொட்டிகள், கழிவறைகள், பயணிகளின் உடைமைகள் ஆகியவை தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரம் தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மோப்ப நாய்கள் உதவியுடன் நேற்று காலை மீண்டும் சோதனை மேற்கொண்டனர். போலீஸார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதால், பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல, 6 இடங்களில் குண்டு வெடிக்கும் என நேற்றும் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்கிடையில், கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று அழைப்பு எங்கிருந்து வந்தது என சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தென்காசியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. பின்னர், தென்காசி போலீஸாருக்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டது.

கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த செல்போன் முகவரிக்கு போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீஸாரிடம் சிக்கினார். விசாரணையில், அந்த நபர், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துசிவா(31) என்பதும், காசநோய் பாதிப்பு மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

முத்துசிவா போலீஸாரின் விசாரணையில் இருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எழிலகத்துக்கு மிரட்டல்: இதுபோல, மது அருந்திவிட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்பு கொண்டு, எழிலகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி(43) என்பவரை அண்ணா சதுக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in