Published : 14 Feb 2025 12:06 AM
Last Updated : 14 Feb 2025 12:06 AM

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: குருக்கள் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பெயரில் போலியாக இணையதள முகவரி தொடங்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த புகார் தொடர்பாக கோயில் குருக்கள் உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் நிர்வாக மேலாளர் எஸ்.சீனிவாசன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில், “சுவாமிகளுக்கு அபிஷேகம், அன்னதானம், சிறப்பு அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம், தங்கும் விடுதி உள்ளிட்டவற்றுக்கு வெளியூர் பக்தர்கள் கோயில் இணையதள முகவரியில் பதிவு செய்கின்றனர். பிரசாதங்களை அஞ்சல் வழியாக பெறுகின்றனர்.

இந்நிலையில், கோயிலில் அர்ச்சனை செய்வதற்காக இணையதள முகவரி வாயிலாக வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பி.என்.சுப்பிரமணியன், என்.எஸ்.மகாதேவன் ஆகிய முறையே ரூ.981, ரூ.4,500 அனுப்பியதாகவும், பிரசாதம் வரவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்தபோது, அதுபோன்ற தொகை வரவில்லை என்பதும், போலியான இணையதள முகவரிக்கு பணத்தை அனுப்பியிருக்கலாம் எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், திருநள்ளாறு கோயிலில் குருக்களாக பணியாற்றும் வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூருவைச் சேர்ந்த ஜனனி பரத் என்பவர் மூலம் கோயில் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி, பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி இணையதளத்தை முடக்கிய போலீஸார், வெங்கடேஸ்வர குருக்கள், ஜனனி பரத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x