

சென்னை: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து மகனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, பள்ளியின் தமிழ் ஆசிரியர் சுதாகர் (43) பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், மாணவனின் பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், இந்த வழக்கு சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த காவல் நிலைய போலீஸார் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழ் ஆசிரியர் சுதாகரை கைது செய்தனர். முன்னதாக அவர் மீது போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.