

மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எடப்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வேன் நேற்று முன்தினம் மாலை வெள்ளாண்டி வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்த, ஒரே வகுப்பில் பயிலும் 14 வயதுடைய இரு மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு மாணவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மற்றொரு மாணவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
ஆண்டு விழாவின்போது... இதில், பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆண்டு விழாவின்போது இரு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளதும், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வேனில் வீட்டுக்குச் சென்றபோது பெற்றோர் குறித்து தவறாகப் பேசியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.