டிஜிபி சந்தீப் மிட்டல்
டிஜிபி சந்தீப் மிட்டல்

‘சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்ல வேண்டாம் - வெளிநாடுகளில் ஆபத்தில் சிக்க வாய்ப்பு’

Published on

சென்னை: சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது தொடர்பான ‘பாத்து போங்க’ விழிப்புணர்வு நடைபயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரிந்தர் பகத், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 400-க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிக அளவில் வெளி நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் முறையாக செல்வதில்லை. சுற்றுலா விசாவில் செல்கின்றனர். அங்கு மிரட்டலுக்குப் பயந்து, தவறான செயல்களில் ஈடுபட தொடங்குகின்றனர். முதலில் சுற்றுலா விசாவில் சென்று, பிறகு வேலைக்கான விசா வாங்கி கொள்ளலாம் என்று யாராவது தெரிவித்தால், அவர்களை நம்பி போக வேண்டாம். அதுபோல் செல்வதால் ஆபத்துள்ளது” என்றார்.

குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரிந்தர் பகத் பேசும்போது “வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக எப்படி செல்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது” என்றார்.

அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். பதிவு பெறாத முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in