

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரே அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதால் போக்சோ வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகளான மைனர் சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார், தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் கருவுற்ற அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் சென்றபோது, சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து சுகாதார நிலைய அதிகாரிகள் குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் மற்றும் சம்பவத்தை மறைத்த சிறுமியின் தாயார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முத்துக்குமாருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துக்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரும், தானும் திருமணம் செய்து கொண்டதாகவும், மாமியார் தன்னை கவனித்துக் கொள்வதாகவும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், முத்துக்குமாருக்கும் இடையே வயது வித்தியாசம் மட்டுமே உள்ளது. அந்த வித்தியாசம் அவர்கள் இருவருக்கும் இடையேயான கணவன் - மனைவி என்ற உறவை தகுதி நீக்கம் செய்துவிடாது. முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’’ என கூறி அவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.