

சென்னை: வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் ஐயா பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமி சகோதரி மகள் தமிழ்செல்வி (22) வசிக்கிறார்.
இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்துள்ளனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஆண்டு திருப்பூரில் உள்ள காளிமுத்துவின் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர், இருவரும் தமிழ்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் காளிமுத்து சந்தேகம் கொண்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் கோபித்துக் கொண்டு காளிமுத்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதன்பின் திரும்பி வரவில்லை. கணவருடன் வாழப் பிடிக்காததால் தமிழ்செல்வியும் கணவரை தேடவில்லை.
இந்நிலையில் காளிமுத்து கடந்த 2 தினங்களாக தமிழ்செல்வியின் வீட்டருகே வருவதும், போவதுமாக இருந்துள்ளார். இதனால் தாய் வீட்டில் இருந்தால் காளிமுத்து தன்னிடம் தகராறு செய்வார் என பயந்து அதே தெருவில் உள்ள சித்தி தனலட்சுமி வீட்டில் தமிழ்செல்வி தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை காளிமுத்து, ஐயா பிள்ளை தோட்டம் தெருவில் உள்ள தனலட்சுமி வீட்டின் அருகே வந்துள்ளார்.
அப்போது தனலட்சுமி வாசலை பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த காளிமுத்து மனைவி தமிழ்செல்வியை தன்னுடன் வாழ அனுப்புமாறு கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த காளிமுத்து, தயாராக கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில், பலத்த காயம் அடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள காளிமுத்துவை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.