

சேலம்: ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் சாராயம் விற்பனை செய்யப் படுவதாக போலியாக காணொலி வெளியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆத்தூர் கல்லாநத்தம் அருகே வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவர், வளையமாதேவியில் டாஸ்மாக் மதுக்கடை அருகில் உரிமம் காலாவதியான பிறகும் மதுபான பார் நடத்தி வந்தார்.
அதேபோன்று, நரசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடை அருகில் ரவி (எ) பாம்பு ரவி உரிமம் காலாவதியான பிறகும் பார் நடத்தி வந்தார். இந்நிலையில் நரசிங்கபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் ஜோதிவேல் மதுபான பார் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதனால், இரு தரப்புக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், வளையமா தேவியில் ஜோதிவேல் நடத்தி வந்த பாரில் சாராயம் விற்பனை நடைபெறுவது போன்று காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஆத்தூர் மதுவிலக்கு போலீஸார் விசாரணை நடத்தி, தகுந்த உரிமமின்றி பார் நடத்திய ஜோதிவேல், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சக்திவேல், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், ஜோதிவேல் நடத்தி வந்த மதுபான பாரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலியாக காணொலி வெளியிட்ட ரவி, அவரது மகன் சரண், இளங்கோ மன்னன், வினோத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த ஆத்தூர் ஊரக காவல் நிலைய போலீஸார், ரவியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: ரவி, அவரது மகன் சரண், இளங்கோ மன்னன், வினோத் ஆகியோர், மதுபான பார் நடத்துவது தொடர்பாக உள்ள விரோதம் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் பகுதியில் இருந்து 4 பாக்கெட்டுகளில் சாராயத்தை மறைத்து எடுத்துச் சென்று , ஜோதிவேல் நடத்தி வந்த மதுபான பாரில் சாராயம் விற்பது போன்று வீடியோ எடுத்து தவறான தகவலை பரப்பி உள்ளனர்.
எனவே, சாராயம் வைத்திருந்தது தொடர்பாகவும், தவறான தகவலை பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் ரவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவி கைது செய்யப்பட்டுள்ளார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.