

சென்னை: டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த கட்டிட மேஸ்திரியை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்ததாக பிரபல ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை, வ.உ.சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (36). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இவர் கடந்த 2-ம் தேதி அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலை, டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் மது அருந்திக்கொண்டிருந்த 3 நபர்கள் மகேஷிடம் பணம் கேட்டு கத்திமுனையில் மிரட்டியுள்ளனர்.
அவர் பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த 3 நபர்களும் மகேஷின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மகேஷ் இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மகேஷை தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்டது தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற குள்ள சதீஷ் (21), கோட்டூர்புரம் சித்ரா நகர் விக்ரம் (22), ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ரோகித் (22) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சதீஷ் மீது 9 வழக்குகளும், விக்ரம் மீது 7 வழக்குகளும், ரோகித் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.