Published : 05 Feb 2025 04:07 PM
Last Updated : 05 Feb 2025 04:07 PM
உதகை: சமீப காலமாக ‘டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் இணைய வழி மோசடி கும்பல் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள்போல் நடித்து ஆடியோ, வீடியோ அழைப்புகள் மூலமாக மிரட்டுகின்றனர்.
இதை நம்பி அச்சமடைந்து, மோசடி கும்பலிடம் பலர் பணத்தை இழக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் குன்னுரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிஜிட்டல் கைது என்று கூறி, 8 நாட்கள் வீட்டு காவலில் வைத்து ரூ.15 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது. தற்போது உதகையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், டிஜிட்டல் கைது என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த 28 வயது இளம் பெண், சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், உங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் 140 கிராம் எம்டிஎம்ஏ எனப்படும் போதைப்பொருள், 5 பாஸ்போர்ட்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் உள்ளன.
எனவே, உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். மேலும், எங்கள் அதிகாரி உங்களை காப்பாற்றுவார், அவர் சொல்வதை கேளுங்கள் என்று மற்றொருபுறம் நம்பிக்கையும் அளித்துள்ளனர். இதை நம்பி, சிக்கலில் இருந்து தன்னை காக்கும்படியும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் இளம்பெண் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, வங்கி கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக எங்களுடைய கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும், விசாரணை முடிந்த பின்னர் அந்த பணம் உங்களுடையதுதான் என உறுதி செய்யப்பட்டு பின், உங்கள் வங்கி கணக்குக்கு மீண்டும் அனுப்பப்படும் என்றும், சைபர் கிரைம் ஆசாமிகள் கூறியுள்ளனர். இதற்கு தன்னிடம் கைவசம் பணம் எதுவும் இல்லை என்றும், ஏடிஎம் கார்டுகூட இல்லை என்றும், உதகையில் உள்ள வங்கி கணக்கில் மட்டும் பணம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, சென்னையில் இருந்து உடனடியாக உதகைக்கு புறப்பட வேண்டும் என்றும், சென்னையிலிருந்து உதகை சென்றடையும்வரை, வாட்சப் செயலி காலில் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதன்படியே, அந்த இளம் பெண்ணும் உதகைக்கு வந்துள்ளார். சரிவர தூங்காமல் 14 மணி நேரமும் செல்போன் இணைப்பில் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, உதகையிலுள்ள வங்கிக்கு சென்று கணக்கில் இருந்த பணத்தை ஆன்லைன் மூலமாக, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார். பணம் கைமாறியவுடன், மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உதகை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறும்போது, “டிஜிட்டல் கைது என்று கூறி, சமீப நாட்களாக வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்குக்கு மாற்றி ஏமாற்றுகின்றனர். டிஜிட்டல் கைது என்று கூறி, போலீஸார் ஒருபோதும் தொடர்புகொள்ள மாட்டார்கள். சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால், சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT