Published : 05 Feb 2025 06:30 AM
Last Updated : 05 Feb 2025 06:30 AM
கிளாம்பாக்கம் / சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தோழியுடன் சேலத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மற்றொரு தோழி சென்னை மாதவரத்தில் கணவருடன் தங்கியுள்ளார். கணவர் வேலைக்கு சென்று விடுவதால் தோழிக்கு உதவியாக இருக்க மேற்குவங்க பெண் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்துள்ளார். இரவு 10 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பேருந்து வரவில்லை.
இதனை கவனித்து கொண்டிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் எங்கு செல்கிறீர்கள் என கேட்டபோது மாதவரம் என கூறியுள்ளார். நானும் அங்கு தான் செல்கிறேன் என கூறி அழைத்துள்ளார். பெண் வர மறுக்கவே ஆட்டோவில் ஏற வற்புறுத்தி அவரையும் அவரின் உடமையையும் ஆட்டோவில் வலுகட்டமாகமாக ஏற்றி அழைத்து சென்றுள்ளார்.
நண்பர்களுக்கு அழைப்பு: ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொல்லியுள்ளார். அப்போது வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியுள்ளனர். அப்போது திடீரென இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
தோழிக்கு குறுஞ்செய்தி: பெண் தனது தோழிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸார் ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரை கண்காணித்து ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றனர். போலீஸார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயல் அருகே மாதா கோயில் தெருவில் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
பெண்ணை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஜிபிஎஸ் உடன் கூடிய மீட்டர் அவசியம்: உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் ஹுசைன் இச்சம்பவம் குறித்து கூறும்போது, “சம்பந்தப்பட்ட பெண்ணை சாலையில் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. பேருந்து நிலையத்துக்குள்ளே இருக்கும் ப்ரீபெய்டு ஆட்டோ அல்லது செயலியில் பயணித்திருந்தால் இதுபோன்ற சிக்கல் இருந்திருக்காது.
அதேநேரம், பாதுகாப்பு கருதி ஆட்டோவில் ஜிபிஎஸ் உடன் கூடிய மீட்டரை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். மேலும், சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் சிசிடிவி போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தில் பதிவு செய்து, வழக்கமான தொழில் செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT