

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து பெரம்பூருக்கு வந்த விரைவு ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்க்கபந்து, தலைமைக் காவலர் பிரேம் ஆனந்த் ஆகியோர் நேற்று முன்தினம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து பெரம்பூர் வழியாக எர்ணாகுளம் நோக்கிச் செல்லும் ரயில் வந்தது.
இந்த ரயிலிலிருந்து இறங்கிவந்த பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தபோது, இருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபர்களைப் பிடித்து, பைகளை சோதித்தபோது, அதில் 6 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து, அந்த நபர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த மகேஷ்வர் தாரேய் (31), ஜெயஸ்வர் மஜி(21) என்பதும், ஒடிசா மாநிலம் ஜார்ஜ் கூட என்ற இடத்திலிருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பரங்கிமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.