

சென்னை: சென்னையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அதிமுக பகுதி துணை செயலாளர் காசிநாதன், அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு தேநீர் அருந்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்றிருந்தார்.
தேநீர் அருந்திவிட்டு, தனது சைக்கிளுக்கு பதிலாக, அதேபகுதியை சேர்ந்த மற்றொரு நபரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சைக்கிளின் உரிமையாளர் காசிநாதனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, அவர் இது தனது சைக்கிள் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து, அந்த நபர், தனது மகள்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது 2 மகள்களும், காசிநாதனின் வீட்டுக்கு சென்று, சைக்கிள் தனது தந்தைக்குரியது. சைக்கிளை கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காசிநாதன், அந்த 2 பெண்களையும், சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண்கள் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காசிநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.