

சென்னை: பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர், ஜெயா கார்டன், ராகவன் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ் பாபு (57). இவர் கடந்த 22-ம் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் மற்றும் 1 ரோலக்ஸ் கைக்கடிகாரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினர். இதில், விக்னேஷ் பாபு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த ராகுல் (19), குன்றத்தூரில் உள்ள நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைதான ராகுல், பெரம்பூர் பகுதியில் இதுவரை 4 பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றதும், திருடியவற்றை நண்பரான சண்முகத்திடம் கொடுத்து விற்பனை செய்து இருவரும் சேர்ந்து செலவு செய்ததும் தெரியவந்தது. இதன்பேரில் இருவரிடமிருந்தும் 43 பவுன் நகைகள் மற்றும் 84 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.