

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவதாக மிரட்டி, ஓய்வுபெற்ற தொலைதொடர்பு நிறுவன பொறியாளரிடம் ரூ.59.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள, ஐயப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பழனிசாமி(76). இவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மாவட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், தான் சிபிஐ புலனாய்வு அமைப்பின் சிறப்பு அதிகாரி என்றும், நரேஷ் கோயல் என்பவருடன் சேர்ந்து சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் உங்கள் மீது அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போகிறோம் என மிரட்டியுள்ளர். பழனிசாமி, தனக்கு அந்நபர் யாரென்று தெரியாது என கூறியுள்ளார். அந்நபர், பழனிசாமியிடம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.
தொடர்ந்து, உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரியும். அந்த பணத்தை நான் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள். சட்ட விரோதமாக அப்பணம் வந்ததா என ஆய்வு செய்த பின்னர் திருப்பி அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார்.
பழனிசாமி தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.59 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு 3 தவணைகளில் அனுப்பியுள்ளார். ஆனால், பணம் திரும்ப வரவில்லை. சிபிஐ அதிகாரி எனக் கூறிய நபரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அதன் பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பழனிசாமி, நேற்று முன்தினம், கோவை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.