

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் ராஜாஜி நகர் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்(24). குத்துச் சண்டை வீரரான இவர், மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் அந்தப் பகுதியில் உள்ள ஓர் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் தனுஷிடம் வீண் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளது. உயிருக்கு பயந்து ஓடிய தனுஷை அந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டிவிட்டு தப்பியது. இந்த தாக்குதலில் தனுஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கானா பாடுவதில் தகராறு: தகவல் அறிந்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் சம்பவ இடம் விரைந்து தனுஷ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலை தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்வில், கானா பாட்டு பாடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர் தரப்பினரை தனுஷ் தாக்கியுள்ளார். மேலும், அந்த பகுதியில் அடிக்கடி கெத்து காட்டி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தனுஷை கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்தது.
இவ்வழக்குத் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான மோகன் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தனுஷால் தாக்கப்பட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மோகன் தீர்த்துக்கட்டியுள்ளார் எனத் தெரியவந்ததாக போலீஸார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.