

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் துரிதமாக செயல்பட்டு 9 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (24). இவர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பல பெற்றுள்ளர். தொடர்ந்து காவலர் ஆகும் எண்ணத்தில் அதற்கான தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் தனுஷ் மீது போலீஸ் வழக்கும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு (புதன்கிழமை இரவு) வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தனுஷை அங்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்கச் சென்ற அவரது நண்பரும் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.