

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வரும் விமானத்தில் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நள்ளிரவில் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த 2 ஆண், ஒரு பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பிய அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 24 பாக்கெட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த பாக்கெட்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, ரூ.23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.