

சென்னை: பால் முகவர்களிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக ஆவின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் துலுக்காணம் தெருவில் வசித்து வருபவர் சேர்மத்தாய்(39). ஆவின் பால் முகவராக செயல்பட்டு வருகிறார். இதற்காக பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள ஆவின் அலுவலகத்தில் தினந்தோறும் சென்று பணம் செலுத்தி பால் பாக்கெட்டுகள் பெறுவது வழக்கம்.
இந்நிலையில், அதில் சிரமம் இருந்ததால் ஆவின் அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளராக உள்ள அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த சித்தராஜ்(30) என்பவரிடம், தனது வங்கி கிரெடிட் கார்டை கொடுத்து, தினந்தோறும் வாங்கும் ஆவின் பால் பாக்கெட்களுக்கு அந்த கிரேடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறி, அதற்கான பாஸ்வேர்டையும் கூறியுள்ளார். அதன்படி, சித்தராஜ், பால் பாக்கெட்களை அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், கிரெடிட் கார்டில் இருந்து பால் பாக்கெட்கள் தவிர மேற்கொண்டு பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், தான் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சேர்மத்தாயின் காரை வாடகைக்கு விட்டால் தினந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி பணம் தராமல், அதிலும் மோசடி செய்துள்ளதுள்ளார். இவ்வாறு ரூ.3 லட்சத்து 24,916 மோசடி நடைபெற்றுள்ளது.
இதேபோல, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பால் முகவரின் வங்கி டெபிட் கார்டை வாங்கிக்கொண்டு, அதில் இருந்தும் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் எடுத்து சித்தராஜ் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பாதிப்புக்கு உள்ளான இருவரும் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து சித்தராஜை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.