உதகையில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஓட்டலில் ஆன்லைன் மோசடி

மிதுன் சக்கரவர்த்தி | கோப்புப்படம்
மிதுன் சக்கரவர்த்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

உதகை: நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஓட்டலில், ரூ.20 லட்சம் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு உதகை, பெங்களூரு, புனே, ஜோத்பூர் உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜன.13ம் தேதி அன்று இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள ஓட்டல் மேலாளரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குன்னூரில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமாக பணியில் உள்ளேன்.

நான் இருக்கும் இடத்தில் நெட்வொர்க் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் அனுப்பும் வங்கி கணக்குக்கு அனுப்புமாறு கூறப்பட்டு இருந்தது. அந்த பணத்தை தாமதம் இல்லாமல் உடனடியாக அனுப்பும்படி அதில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய மேலாளர் ஓட்டல் வங்கிக் கணக்கில் இருந்து, வாட்ஸ் அப் குறுந்தகவலில் வந்த வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்தை அனுப்பிவிட்டார்.

பொங்கல் தினமான மறுநாள் மிதுன் சக்கரவர்த்தி வேறு ஒரு வேலை விஷயமாக இங்குள்ள மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான் மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஓட்டல் மேலாளர் உடனடியாக இதுகுறித்து உதகை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, எந்த வங்கிக் கணக்குக்கு பணம் சென்றுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in