

கோவை: பெங்களூரில் இருந்து கோவையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி அருகே, லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக, வடவள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார் நேற்று (ஜன.28) மாலை மருதமலை சாலை, வடவள்ளி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சாக்குமூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையில் மதுபாட்டில்களும் கிடந்தன.
இதையடுத்து லாரியின் ஓட்டுநர் கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (50) என்பவரைப் பிடித்து விசாரித்த போது, வீரகேரளத்தைச் சேர்ந்த குமரேசன்(57), திருப்பூர் திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த சதீஷ்பாபு(43), அவரிடம் வேலை செய்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத்குமார்(20) ஆகியோர் சேர்ந்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெங்களூரில் இருந்து வாங்கி, கோவைக்கு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரங்கநாதன், குமரேசன், சதீஷ்பாபு, விஸ்வநாத்குமார் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், 517 மதுபாட்டில்கள், 3 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.