

சேலம்: சேலத்தில் அதிக கடனால் தாய், தந்தை, மகள் மூவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் 4 ரோடு அருகே உள்ள தெப்பக்குளம் பகுதி முத்தியாலு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). வெள்ளித் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை பால்ராஜின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை.
இதுகுறித்து அவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகியோர் தூக்கில் உயிரிழந்த நிலையில் இருந்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், பால்ராஜ் கடன் பெற்று புதிய வீடு கட்டியுள்ளார். இந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு உதவி: தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை எண்ணத்துக்கு தீர்வு தேட உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 (Mon - Sat, 8am - 10pm) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.