

மயிலாடுதுறை: சீர்காழி அருகே 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மகன் சிவச்சந்திரன் (27), தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது தாய், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அங்கு நிஷாந்தி என்ற பெண்ணுடன் சிவச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்பெண், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருவதாக சிவச்சந்திரனிடம் கூறியுள்ளார். பின்னர். இருவருக்கும் ஜன.20-ம் தேதி சீர்காழியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் கண்ட சீர்காழி அருகேயுள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (34), சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிஷாந்தி மீது ஜன.25-ம் தேதி புகார் அளித்தார்.
அதில், புகைப்படத்தில் உள்ள பெண், தன்னை மீரா என்றும், அரசு ஊழியர் என்றும் கூறி என்னுடன் பழகினார். 2017-ல் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், சென்னையில் வசித்தபோது, 2021-ல் திடீரென பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதனிடையே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவச்சந்திரனும் நேற்று முன்தினம் சீர்காழி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அப்பெண்ணை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி(34) என்பதும், இவருக்கும் பழையாறு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்று, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். 10 ஆண்டுக்கு முன்பு சிலம்பரசன் இறந்து விட்டதால், கணவரின் சகோதரர் பராமரிப்பில் பெண் குழந்தையையும், தனது தாயிடம் ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு, தன் பெயரை மாற்றிக் கொண்டு, 2017-ல் நெப்போலியனையும், 2021-ல் சிதம்பரம் கோல்டன் நகரைச் ராஜாவையும். தொடர்ந்து, அண்மையில் சிவச்சந்திரனையும் ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.