

சென்னை: கந்து வட்டி கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி நாகேந்திரனின் தங்கை, அவரது கணவருடன் 3-வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாசர்பாடி 4-வது பள்ளத் தெருவைச் சேர்ந்த முருகனை ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகமும் அவரது கணவர் சதீஷும் சேர்ந்து கந்து வட்டி கேட்டு கத்தி முனையில் மிரட்டி தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக முருகன், காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து கற்பகம், அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், மகனுக்கு புற்று நோய் சிகிச்சை அளிக்க வியாசர்பாடியைச் சேர்ந்த மதிவதனம் என்ற பெண் (56) கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்ற நிலையில் ரூ.40 ஆயிரத்தை திரும்ப செலுத்தி உள்ளனர்.
மீதம் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கு அதிக வட்டி கேட்டதோடு, வீடு சென்றும் கை மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து கற்பகம், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர். இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே, இவர்கள் இருவரும் மற்றொரு கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த ஒரு வாரத்துக்குள் மூன்று கந்து வட்டி வழக்குகளில் இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளதால், இவர்கள் மீது விரைவில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.