

திருப்பூர்: திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் கைவிடப்பட்ட பாறைக் குழியில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி வாஷிங்நகரை சேர்ந்தவர் ராஜா. பனியன் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (28). மகள்கள் பிரகன்யா (9). மற்றும் பிரகாஷினி (7). இந்நிலையில், அதே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதில் பொதுமக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (ஜன.27) மதியம் ராஜா மனைவி ரேவதி மற்றும் தம்பதியரின் மகள்களான ஆகியோர் துணி துவைக்க தாய் ரேவதியுடன் சென்றுள்ளனர். இவர்களது சகோதரி தீபா மற்றும் அவரது 2 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சகோதரிகள் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, இருவரின் 4 மகள்களும் தவறி தண்ணீருக்குள் விழுந்தனர். இதையடுத்து ரேவதி மற்றும் அவரது சகோதரி தீபா ஆகியோர் அலறியபடி குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இருவரின் அலறல் சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்தவர்கள் தீபா மற்றும் குழந்தைகளை மீட்டனர். ரேவதி மற்றும் அவரது 2 மகள்கள் தண்ணீருக்குள் மூழ்கினர். தொடர்ந்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் மங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் ரேவதியின் சடலத்தை மீட்டனர். 2 குழந்தைகளின் சடலங்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் இன்று மாலை 3 பேரும் மூழ்கிய பாறைக் குழியை பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். தொடர்ந்து பிரகாஷினியின் சடலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து பிரகன்யாவின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.