

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், தினமும் வேலை தேடி வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து, திருப்பூர், கோவை, கரூர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தி, உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தினர் பலர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகரில் 15 பேர், வேலம்பாளையம் காவல்எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 பேர், தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 பேர், நல்லூர் காவல் நிலையப் பகுதியில் பெண் உட்பட 10 பேர் என மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரே மாதத்தில் திருப்பூரில் 83 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.