

சென்னை: பாலீஷ் போடுவதற்காக கொடுத்த 23 பவுன் நகையுடன் ஊழியர்கள் இருவரை மேற்கு வங்கம் சென்று சென்னை போலீஸார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு, சிவானந்தா சாலை பகுதியில் வசிப்பவர் சையது வாசுதீன் கில்ஜி (39). தி.நகர் மூசா தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே சானி, ஆரிப் ரஹ்மான் ஆகிய இருவர் பணிபுரிந்து வந்தனர். இவர்களிடம் கடந்த 18-ம் தேதி 23 பவுன் நகைகளை பாலீஷ் போடுவதற்காக சையது வாசுதீன் கில்ஜி கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஊழியர்கள் இருவரும் அந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார் விசாரித்தனர். இதில், ஊழியர்கள் இருவரும் மேற்கு வங்கத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகளும் மீட்கப்பட்டன. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.