

தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் சைலேஷ். இவர், இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது, இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் தலைமறைவாக இருந்த சைலேஷை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்ஐ பணியிடை நீக்கம்: வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் வீராணம் பகுதியில் வசித்து வரும் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. ஊர் மக்கள் அங்கு திரண்டதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.