

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் 12 வயது சிறுமிகழுத்தில் சேலை இறுக்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது சகோதரி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் தாய், நேற்று முன்தினம் காலை மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவரும் வேலைக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், வழக்கம் போல, மாலை 12 வயது சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, 12-ம் வகுப்பு என்பதால், தாமதமாக வந்த அவரது சகோதரி, வீட்டின் அறையைத் திறந்து பார்த்த போது, அறைக்குள் கழுத்தில் சேலை இறுக்கிய நிலையில், 12 வயது சிறுமி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது விளையாடும்போது சேலை கழுத்தில் இறுகி உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.