

சென்னை: துரந்தோ விரைவு ரயிலில் ராணுவ வீரர் தவறவிட்ட 12 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை ஒப்படைக்காமல், திருடிய பிஹார் இளைஞர்கள் இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் மவுலீஸ்வரன். இவர், பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக, தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். அதன்படி, டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு துரந்தோ விரைவு ரயிலில் கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் வந்தார்.
பின்னர், மற்றொரு ரயிலில் காட்பாடிக்கு சென்றுகொண்டிருந்தபோது, துரந்தோ விரைவு ரயிலில் 12 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை தவறவிட்டதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திரும்பி வந்து, ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். இதன்பேரில், சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்டமாக, சிசிடிவி கேமராவில் பதிவானகாட்சிகளை வைத்து, பேசின்பாலம் பணிமனையில் படுக்கை விரிப்பு, போர்வை எடுக்கும் ஒப்பந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில், காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அவர்கள், பிஹார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விக்கிகுமார் (21), ஹிரா குமார் (24) ஆகியோர் என்பதும், ராணுவவீரரின் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை ஒப்படைக்காமல் திருடியதும் தெரியவந்தது.
அவர்களிடம் 7 சவரன் தங்கம் ஆபரணங்கள், 900 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, அவர்களை ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.