

சென்னை: தங்கையை தாக்கியதால் அவரது கணவரை, ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்த சம்பவம் ஆர்.கே.நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜய் (29). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இத்தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அப்போது, அஜய் தனது மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். பிரியா இதுகுறித்து, தனது அண்ணனான தண்டையார்பேட்டையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் (31) கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜய் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதை அறிந்த அண்ணன் அன்புச்செல்வன் சகோதரி வீட்டுக்குச் சென்று அஜய்யை கண்டித்துள்ளார். இதில், அஜய் - அன்புச்செல்வன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அன்புச்செல்வன் அங்கிருந்த கத்தியால் அஜய்யின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில், அஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே அன்புச்செல்வன் இரவோடு இரவாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலின் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் பிரவீனிடம் சரணடைந்தார்.
அவரை ஆர்.கே.நகர் போலீஸார் கைது செய்தனர். கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சகோதரி கணவரைக் கொலை செய்த அன்புச்செல்வன் மீது 2016-ல் ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.