

சென்னை: சென்னை அண்ணாநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் பலத்தக் காயமடைந்தார். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (26). அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் மொபெட்டில் அமைந்தகரை காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் மேம்பாலத்தில் செல்லும்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ரம்யா கழுத்தில் சிக்கி அறுத்தது. அவர், நிலை தடுமாறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிட, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஞ்சா நூல் பட்டு பெண் காவலர் காயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.