

சென்னை: ஹவாலா பணம் குறித்து விசாரித்தபோது, போலீஸாரை மிரட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் அசோக் நகர் போலீஸார் கடந்த 19-ம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் இருவர் நின்றிருந்தனர். அதை கவனித்த போலீஸார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். அப்போது, அதில் கட்டுக்கட்டாக ரூ.10 லட்சத்து 57,900 ரொக்கம் இருந்துள்ளது. ஆனால், அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, பிடிபட்ட இருவரிடமும் தொடந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பிடிபட்டது ராமநாதபுரம் மாவட்டம், பி.வி.பட்டினத்தைச் சேர்ந்த அபு பைசல் ஷம்பு (25), அதே மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (27) என்பது தெரியவந்தது.
இவர்கள் திருவல்லிக்கேணியில் தங்கி ஹவாலா பணப் பரிமாற்ற ஏஜென்ட்கள் கொடுக்கும் பணத்தை அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்ததும், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக பிடிபட்ட பணம் குறித்து விசாரித்தபோது போலீஸாரை அபு பைசல் ஷம்பு, முகமது அசாரூதின் ஆகிய இருவரும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அசோக் நகர் போலீஸார் அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.