

புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அறிமுகம் இல்லாத ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து இவருக்கு நட்பு அழைப்பு வந்துள்ளது. இவர் அந்த நபருடன் நட்பாக பேசி பழகி உள்ளார்.
சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த நபர் அச்சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்தப் சிறுமி அந்த காதலை ஏற்க மறுத்துள்ளார். கோபமடைந்த அந்த நபர், ‘உனது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் அனுப்பி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஆடையில்லாமல் வீடியோ கால் செய்யுமாறு மிரட்டியுள்ளார். பயந்து போன அந்த சிறுமி, இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக பெற்றோர் புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் தியாகராஜன் போக்சோ சட்டப்பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அந்த நபர் தொடர்பு கொண்டு, தான் கடலூர் வந்துவிட்டதாக கூறி, ‘நீ கடலூர் வரவில்லை என்றால் உன்னுடைய போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்’ என்று சிறுமியை மிரட்டி, மார்பிங் செய்த புகைப்படம் ஒன்றை அனுப்பி மிரட்டி உள்ளார்.
இந்தத் தகவலை அந்த சிறுமியின் பெற்றோர் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவிக்க, ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி, தலைமை காவலர் இருசவேல், காவலர் அரவிந்தன், பெண் காவலர் கமலி ஆகியோர் கடலூர் சென்று அந்த பெண்ணை எந்த இடத்திற்கு வரச் சொன்னாரோ, அந்த இடத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து, அங்கு வந்த முஜீப் அலியை பிடித்தனர். அந்த நபரிடம் இருந்த தொலைபேசியை ஆய்வு செய்த போது, சிறுமியின் மார்பிங் புகைப்படம் இருந்துள்ளது. தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: மன்னார்குடியைச் சேர்ந்த முஜீப் அலியை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அவரது மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பல்வேறு பெண்களுக்கு இது போன்று கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அழைப்பு விடுத்து தவறான முறையில் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது.
முதலில் நட்புடன் பழகி, பின்னர் பல்வேறு பெண்களை ஆடை இல்லாமல் வீடியோ கால் மூலம் வரச்சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்காக அவர், 10-க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடி பயன்படுத்தி வந்ததுள்ளார். முஜிப் அலி சிங்கப்பூரில் பணிபுரிந்தவர். டிப்ளமோ படித்தவர் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முற்பட்டு வந்த சூழலில், புதுச்சேரி சிறுமியிடம் தவறாக நடக்க வந்தபோது பிடிபட்டார்.
அவருடைய செல்போனில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடைய புகைப்படங்கள் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவருடைய செல்போனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். நேற்று மாலை தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இது பற்றி இணையவழி எஸ்எஸ்பி நாரா சைத்தானியா கூறுகையில், "சமூக வலைதளங்களில் முகம் தெரியாத புதிய நபர்கள் அனுப்பும் நட்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம்.சமூக வலைதளங்களில் பார்ப்பது அனைத்தும் உண்மை இல்லை. ஆடையின்றி புகைப்படம் எடுப்பதும் வீடியோ கால் செய்வதும் பிரச்சிசனையை ஏற்படுத்தும். புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கை கூறியவர்களிடமோ உடனடியாக தெரியப்படுத்தவும். 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது அவசியம்" என்றார்.