சென்னை | ரூ.10.57 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: ராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் சிக்கினர்

சென்னை | ரூ.10.57 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: ராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் சிக்கினர்
Updated on
1 min read

சென்னை: மேற்கு மாம்பலத்தில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் அசோக் நகர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் இருவர் நின்றிருந்தனர். இதை கவனித்த ரோந்து போலீஸார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கை பையை வாங்கி போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, அதில் கட்டுக்கட்டாக ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. ஆனால், பணத்துக்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, பிடிபட்ட இருவரிடமும் தொடந்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் பிடிபட்டது ராமநாதபுரத்தை சேர்ந்த அபு பைசல் (25), முகமது அசாருதீன் (27) என்பதும், சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி ஹவாலா பண பரிமாற்ற ஏஜெண்டுகள் கொடுக்கும் பணத்தை அவர்கள் சொல்லும் வங்கி கணக்கில் செலுத்துவோம். இதற்காக எங்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

இந்த பணம் ராமநாதபுரத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவருடையது எனவும், அவர் சொல்லும் தகவல் அடிப்படையில் மண்ணடி, பர்மா பஜார் போன்ற இடங்களில் உள்ள கடைகளில் பணத்தை வாங்குவோம். அதை ரிஸ்வான் சொல்லும் வங்கி கணக்கில் செலுத்துவோம் என பிடிபட்ட இருவரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, பிடிபட்ட ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து அதை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in