கரூர்: சிகரெட் இல்லை என்றதால் மளிகைக் கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

கரூர்: சிகரெட் இல்லை என்றதால் மளிகைக் கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
Updated on
1 min read

கரூர்: சிகரெட் தீர்ந்து விட்டதாகக் கூறியதால் மளிகைக் கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர் போலீஸிடமிருந்து தப்ப முயன்றப்போது தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர் கருப்பகவுண்டன்புதூர் மேற்கு கங்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி (21). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மது போதையில் சுப்பிரமணி மளிகை கடைக்கு சென்று சிகரெட் கேட்டுள்ளார். சுப்பிரமணி சிகரெட் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் முகமது அன்சாரி பீடி வாங்கி சென்றுள்ளார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சுப்பிரமணி மளிகை கடைக்கு வந்த முகமது அன்சாரி குவாட்டர் மது பாட்டிலில் மண்ணெண்ணெயை நிரப்பி, துணியை திரி போல திரித்து நெருப்புப் பொருத்தி கடைக்குள் வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் காலி தண்ணீர் கேன்கள் 5 சேதமடைந்தன.

இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சுப்பிரமணி இன்று அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரியை தேடி வந்தனர். கொளந்தானூர் மயானம் அருகே இன்று (ஜன. 19ம் தேதி) பதுங்கியிருந்தவரை போலீஸார் பிடிக்க முற்பட்டனர்.

அப்போது முகமது அன்சாரி தப்பியோட முயன்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது தாந்தோணிமலை, வெங்கமேடு காவல் நிலையங்கள், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன.

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதியை சீர்குலைப்பவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in