

அரசு அதிகாரிகள் போல நடித்து, வங்கிகளில் குறைந்த விலைக்கு தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தில்லை நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (38). இவர் சென்னை பூக்கடை காவல் துணை ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: திருச்சியில் என் தந்தை பங்குதாரராக உள்ள பிரபல நகைக்கடையில் முதன்மை இயக்குநராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2021ம் ஆண்டு ஜிஎஸ்டி அலுவலகம் சென்றபோது, மயிலாடுதுறையை சேர்ந்த குரு சம்பத்குமார் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
தன்னை ஜிஎஸ்டி அதிகாரி என்று கூறிக்கொண்டார். புதுச்சேரியை சேர்ந்த தனது நண்பரான வருமான வரி அதிகாரி லட்சுமி நாராயணனும் (46), தானும் சேர்ந்து தங்க கட்டி வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். சந்தை விலையைவிட குறைவான விலைக்கு வங்கிகளில் இருந்து தங்க கட்டி வாங்கி தருவதாக கூறினார்.
சென்னை யானைக் கவுனியில் உள்ள அலுவலகத்தில் ரூ.40 லட்சத்தை ரொக்கமாக வழங்கினேன். ஆனால், தங்க கட்டிகள் வாங்கி தரவில்லை. எனது பணத்தையும் திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில், யானைக் கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குரு சம்பத்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும், அரசு துறையில் பணிபுரிபவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தமிழக அரசு சின்னத்துடன் போலி விஐபி பாஸ் தயார் செய்து, தங்களது காரில் ‘அ’ (அரசு வாகனம்) என்ற எழுத்தை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.