

மும்பை: 50 மணி நேரம் கடந்தும் சயிப் அலிகானை தாக்கிய நபர் சிக்காத நிலையில் 30 தனிப்படைகள் அமைத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிபை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சயிப் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். தற்போது அவர் உடல்நலன் தேறி வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், “சயிப் உடல்நலன் தேறி வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று சயிப் அலி கானை தாக்கிய நபர் என்று ஒருவரை போலீஸார் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்படார். பின்னர் மீண்டும் இரவில் அவர் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டார். 50 மணி நேரம் கடந்தும் சயிப் அலிகானை தாக்கிய நபர் சிக்காத நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்நாவிஸ், “போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. அவர்களுக்கு நிறைய துப்பு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விரைவில் குற்றவாளியை போலீஸார் கைது செய்வார்கள்.” என்றார்.
போலீஸ் தரப்பில், சயிப் அலிகான் வீட்டில் திருட வந்த நபருக்கு நிச்சயமாக எந்த கொள்ளை கும்பலுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. அது சயிப்பின் வீடு என்று தெரியாமல் கூடத்தான் அந்த நபர் உள்ளே நுழைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சியில் சயிப் வீட்டிலிருந்து வெளியேறிய நபர் படிக்கட்டு வழியாக இறங்கும்போது மேல் சட்டையை மாற்றுகிறார். அவர் கழுத்தில் சிவப்பு நிற ஸ்கார்ஃப் ஒன்று உள்ளது. முதுகில் பை ஒன்றை போட்டிருக்கிறார். இந்த அடையாளங்களைக் கொண்டு போலீஸார் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.