

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது, அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின்பேரில், காவல் துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் வேலு என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 8 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த பாக்கெட்டுகளை தனது உறவினர் ஒருவர் பெங்களூருவில் இருந்து கொண்டுவந்ததாக வேலு கூறியுள்ளார். இதையடுத்து, வேலூர் கலால் பிரிவு ஆய்வாளர் செந்தில் வழக்கு பதிவு செய்து, வேலுவை கைது செய்தார்.