

சென்னை: தங்களின் மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மட்டுமில்லாமல், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் விற்பனை செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு மூலம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, அதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அப்போது அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்கள் செல்போனில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், தனது மனைவியின் உதவியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ததும், இதேபோல், அப்பகுதியில் பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் அந்த தம்பதியை கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார், ஆபாச வீடியோக்களை இவர்களிடம் பெற்று பயன்படுத்தியவர்கள் யார் என்பதையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.