

சென்னை: வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சன்னி லாய்டு சொத்துகளை முடக்கவும், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில், கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்திமுனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. ராஜா சிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், இத்திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டது, சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சன்னி லாய்டு என்பது தெரியவந்தது.
மேலும் இவர், இதுபோன்று பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டுள்ளதும், அதன்மூலம் ஜாம்பஜார் பகுதியில் அதிநவீன உடற்பயிற்சிக் கூடம், ஈசிஆரில் ரிசார்ட், சென்னை புறநகரில் பல கோடி மதிப்பிலான சொத்துகள் வாங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தலைமறைவாக இருந்த அவரை உத்தராகண்டில் கடந்த 14-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சன்னி லாய்டுவின் சொத்துகளை முடக்க சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, அவரின் சொத்துகளை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.