

சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான ரவுடி பாம் சரவணனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர் தொடர்பான ஒரு வழக்கில், அந்த நபரை எரித்துக் கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர் புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பாம் சரவணன்(48). இவர், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம், இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீச்சு வழக்குகள் உட்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் 3 கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் பாம் சரவணனை தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதேநேரம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க பாம் சரவணன் தயாராக இருப்பதாகவும் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், பாம் சரவணன் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் ஆந்திரா விரைந்தனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் பாம் சரவணனை துப்பாக்கி முனையில் நேற்று முன்தினம் கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது போலீஸிடம் இருந்து தப்பியோட முயன்ற அவரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். இதனால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன். அண்ணனின் கொலைக்கு பழி தீர்க்க, ஆற்காடு சுரேஷை 2023-ம் ஆண்டு கொலை செய்ததாக பாம் சரவணன் மீது வழக்கும் உள்ளது. இந்நிலையில், பாம் சரவணன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது:
கோயம்பேட்டில் கடந்த 2018-ம் ஆண்டு சரித்திரப் பதிவேடு ரவுடி பன்னீர்செல்வம் காணாமல்போனார். அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். ஆனாலும் அவரை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பன்னீர்செல்வம் மீது பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை கொலை செய்த வழக்கு உள்ளது.
இந்நிலையில், அண்ணனின் கொலைக்கு பழி தீர்க்க பன்னீர்செல்வத்தை கடத்தி, ஆந்திர எல்லையில் பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்துக் கொன்றுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் காணாமல்போன வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.