

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
விருத்தாசலத்தை அடுத்த எம்.வீராரெட்டிகுப்பம் கிராமத் தைச் சேர்ந்தவர் கதிர்காமன் (43). அதிமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோருடன் முதனை கிராம முந்திரித் தோப்புக்குச் சென்று, மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
பின்னர் கதிர்காமன் வீட்டுக்குச் சென்ற பிரபாகரன், அவரது மனைவியிடம் தங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, கதிர்காமன் மனைவி மற்றும் உறவினர்கள் முந்திரித் தோப்புக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கதிர்காமன் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தகவலறிந்த ஊமங்கலம் போலீஸார் கதிர்காமன் உடலைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார், டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து ஓடிச்சென்று, ராணுவ வீரர் பாலகிருஷ்ணன் வீட்டருகே நின்றது. இதற்கிடையில், பிரபாகரனைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசராணையில்,ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், கதிர்காமனை கொலை செய்து, அவரது உடலை எரித்து விட்டு தப்பிச் சென்றுதெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.