

அபுதாபி செல்லும் விமானத்தில் செல்ல ஜிபிஎஸ் கருவியுடன் வந்த சுவிட்சர்லாந்து நாட்டுப் பயணியின், பயணம் ரத்து செய்யப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து அபுதாபி செல்லும் எத்தியார்டு ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மார்டீன் ரங்கேல் (70) என்பவர் இந்த விமானத்தில் அபுதாபி வழியாக, சுவிட்சர்லாந்து செல்ல வந்திருந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது கைப்பையில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்தது.
இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்பதால் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ``நான் சுற்றுலாப் பயணியாக சில தினங்களுக்கு முன்பு டெல்லி வழியாக சென்னைக்கு வந்தேன். இந்த ஜிபிஎஸ் கருவியை டெல்லி உட்பட எந்த விமான நிலையத்திலும் தடுக்கவில்லை. எங்கள் நாட்டில் விமானங்களில் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் செல்வதற்கு தடையும் இல்லை'' என்று தெரிவித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள், அவருடைய பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்து ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை சென்னை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.