பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் போக்சோவில் கைது
Updated on
1 min read

மதுரையில் 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி எம்எஸ். ஷா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயையும் போலீஸார் கைது செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாதாரப் பிரிவு தலைவராக இருப்பவர் எம்.எஸ்.ஷா. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தனியார் கலை-அறிவியல் கல்லூரி நடத்தி வரும் இவர், அக்கல்லூரியின் தாளாளராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எஸ்.ஷா 15 வயது பள்ளி மாணவிக்கு ஸ்கூட்டர் வாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை மதுரை மாநகர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.

அதில், ‘தனது மகளின் செல்போனில் எம்எஸ்.ஷா அடிக்கடி பேசி, ஆபாசமான தகவல்களை அனுப்பி வருகிறார். எனது மனைவியும் பாஜக பிரமுகர் இருக்கும் இடத்துக்கு மகளை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. மேலும், அவர் சொல்லும் இடத்துக்கு வந்து அவருடன் தங்கினால் புதிய ஸ்கூட்டர் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதற்கு எனது மனைவியும் உடந்தை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதன்படி, எம்எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் மீது மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், பொய்யான புகார் எனக் கூறி அன்றைக்குப் பணியில் இருந்த பெண் ஆய்வாளர் அன்னமயில் வழக்கை ரத்து செய்தார்.

இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். எம்எஸ்.ஷாவின் செல்போன், லேப்-டாப்களை ஆய்வு செய்தபோது, மாணவிக்கு ஆபாசத் தகவல்கள் அனுப்பி இருப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியானது. இதற்கு மாணவியின் தாயும் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து எஸ்எஸ்.ஷா, மாணவியின் தாய் மீது மீண்டும் போக்சோ வழக்குப் பதிவு செய்து நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதுரை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜன. 27-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in