

தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில், திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, பனியன் நிறுவனங்களில் பணியாற்றிய வங்கதேசத்தினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
அசாம் மாநில எல்லை வழியாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள். அங்குள்ள மோசமான சூழல் காரணமாக அவர்கள் தமிழக ஜவுளித் துறையில் பணியில் சேருவதற்காக அசாம் எல்லை வழியாக ஊடுருவி வருகின்றனர்.
குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால், தமிழக ஜவுளித் துறையினரும் அவர்களை ஊக்குவித்து வருகின்றனர் என்று சமீபத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் தங்கி இருப்பதாக, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எஸ்.பி. பத்ரி நாராயணன், ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், பல்லடம் அருகேயுள்ள அருள்புரம், செந்தூரன் காலனி பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, அந்த நிறுவனங்களில் போலியான ஆதார் அட்டைகளைக் கொடுத்து பணியாற்றி வந்த 28 வங்கதேச இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 வங்கதேச இளைஞர்கள், நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வங்கதேச இளைஞர் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டு, அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.