

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரபல பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் லாரியில் ‘புஷ்பா’பட பாணியில் தனி அறை அமைத்து மதுபாட்டில்களை கடத்தியுள்ளனர். லாரியை பிடித்த மதுவிலக்கு போலீஸார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சரண்யா தேவிக்கு லாரி ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கீழ்அம்பி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் மிக வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த லாரி காஞ்சிபுரம் நகரில் உள்ள பிரபல பட்டுச் சேலைகளுக்கு மூலப் பொருட்களையும், சேலைகளையும் எடுத்து வந்தது தெரிய வந்தது.இந்த லாரியை போலீஸார் முழுவதுமாக சோதனையிட்டபோது அந்த லாரியின் டீசல் டேங்க் அருகே ஒரு ரகிசய அறை இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதனை திறந்து பார்த்தபோது அதில் 90 மதுபாட்டில்கள் இருந்தது. கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் இருந்தன. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீஸார் அந்த வாகனத்தை தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். ஓட்டுநர் காண்டீபனிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘புஷ்பா’பட பாணியில் சம்பவம்: ‘புஷ்பா’ படத்தில் பால் லாரியின் டேங்கருக்குள் ரகசிய அறை அமைத்து, அதில் செம்மரக்கட்டைகளை கடத்துவதுபோல் காட்சிகள் வரும். அதுபோல் பட்டுச் சேலை கடைக்கு பொருட்களை ஏற்றி வருவதுபோல் இந்த லாரியின் அடியில் தனி அறை உருவாக்கி மதுபானங்கள் கடத்தப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.