

தேனி: தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து வழக்கு தொடர்பான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தப்பிச் சென்றவர்களை தடுக்க முயன்றபோது காவலர் தாக்கப்பட்டு, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
தேனி பெரியகுளம் சாலை ரத்தினம் நகரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறுவதுடன், பிடிபட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இங்கு வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த காவல்நிலையத்துக்குள் நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து இருவர் நுழைந்தனர்.
பின்பு அங்கிருந்த சில பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அல்லிநகரம் காவல்நிலையத்தில் இருந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ், முதல்நிலை காவலர் முருகேசன் ஆகியோர் இப்பகுதிக்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற இருவரையும் பிடிக்க முயன்றபோது காவலர் முருகேசனை கற்களால் தாக்கினர். இதில் இவருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஒருவரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் இவர் பண்ணைப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பது தெரிய வந்தது.
திருடிச் சென்ற கஞ்சா பொட்டலங்கள், ஏர்கன்,கேமரா உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். தப்பிச்சென்ற கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை தேடி வருகின்றனர். காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.